இந்தியா

Save MNREGA... நாடு தழுவிய பிரச்சார இயக்கம் ஜன.5-ல் தொடக்கம்: கார்கே அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தைக் காப்போம்’ எனும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப் போவதாகக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடெல்லியில் இன்று (டிச.27) கூடியது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இன்றைய கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஓர் உறுதிமொழியை ஏற்றோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான பிரச்சாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்வது என்றும், இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவது என்றும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பிரச்சாரம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கப்படும். காங்கிரஸ் கட்சி இந்த இயக்கத்தை வழிநடத்தும்.

எந்த விலை கொடுத்தாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாங்கள் பாதுகாப்போம். இது வெறும் திட்டமல்ல, இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலை செய்வதற்கான உரிமை. இந்தத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் சதி திட்டத்தை ஜனநாயக ரீதியாக எதிர்ப்போம் என்றும் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு விபி ஜி ராம் ஜி எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.

இந்த புதிய சட்டத்தில், வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்படும், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும், இந்த புதிய சட்டத்தின் மூலம் அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து வேலை வழங்காமல் நிறுத்தி வைக்க முடியும், ஆண்டுக்கு 125 நாள் வேலையை கட்டாயமாக வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT