ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
ராஜஸ்தானின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வலுவான வெற்றி பெற்ற பாஜக, கிராமப்புறங்களில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்றுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல், காங்கிரஸுக்குப் பெரும் ஊக்கத்தையும் அளித்துள்ளன.
ராஜஸ்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 1,271 ஜில்லா பரிஷத் இடங்களில் 794 இடங்களையும், 7,520 பஞ்சாயத்து சமிதி இடங்களில் 3,758 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக 357 ஜில்லா பரிஷத் இடங்களையும், 2,213 பஞ்சாயத்து சமிதி இடங்களையும் வென்றுள்ளது.
ராஷ்ட்ரிய லோக்தாந்திரிக் கட்சி 51 ஜில்லா பரிஷத் இடங்களையும், 497 பஞ்சாயத்து சமிதி இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாயத்து சமிதிகளில் அதிக எண்ணிக்கையிலான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, பாஜக மற்றும் ஆர்எல்பி கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது.
ஜில்லா தலைவர்களுக்கான தேர்தல் நவம்பர் 25-ம் தேதியும், பஞ்சாயத்து சமிதி தலைவர்களுக்கான தேர்தல் நவம்பர் 27-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகளின்படி, பாஜகவின் பல அமைச்சர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜபார் சிங் காராவின் குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக, மாநில அமைச்சர்கள் 17 பேரும், மத்திய அமைச்சர்கள் 3 பேரும் தாங்கள் சொந்த தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெற வைக்கத் தவறிவிட்டனர்.
துணை முதல்வர் பிரேம்சந்த் பைர்வாவின் துடு சட்டமன்றத் தொகுதி, சுகாதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சாரின் லோஹாவத் தொகுதி மற்றும் வேளாண் அமைச்சர் கிரோடி லால் மீணாவின் சவாய் மாதோபூர் தொகுதி ஆகியவற்றில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்துள்ள மாறுபட்ட முடிவுகள், ராஜஸ்தானின் அரசியல் சூழலில் நிலவும் வெவ்வேறு போக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.