குவாஹாட்டி: தேசவிரோத செயல்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
இரு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அசாம் சென்றார். முதல்நாளில் குவாஹாட்டி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.4,000 கோடியில் கட்டப்பட்டு உள்ள புதிய முனையத்தை அவர் திறந்து வைத்தார். இரண்டாம் நாளான நேற்று குவாஹாட்டியில் சொகுசு கப்பல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 மாணவ, மாணவியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இதன்பிறகு குவாஹாட்டியில் உள்ள அசாம் போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அசாமின் நம்ரூப் பகுதியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான உரத் தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அசாம், வடகிழக்கில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. அசாமில் செமி கண்டக்டர் ஆலை, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. அசாம் மாநில வேளாண் துறைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
புதிதாக தொடங்கப்பட உள்ள உரத் தொழிற்சாலையின் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் மெட்ரிக் டன் உரம் உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் அசாம், வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பலன் அடையும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயதொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மிக நீண்ட காலமாக வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நலனில் துளியும் அக்கறை காட்டப்படவில்லை. அசாமில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் ஓராண்டில் 2.25 கோடி டன் யூரியா மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது ஓராண்டில் 3.06 கோடி டன் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 8 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மூட்டை யூரியாவின் விலை ரூ.3,000 ஆகும். இதை ரூ.300 என்ற விலையில் வழங்கி வருகிறோம்.
அசாம் பாடகர் பூபேன் அசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனது ஆரம்ப கால வாழ்க்கையின்போது தேநீர் விற்பனை செய்திருக்கிறேன். இதன்காரணமாக அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துகிறேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி ஆட்சியில் இருந்தபோது அசாமில் ஊடுருவல்காரர்களை குடியேற்றியது. அவர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது. ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக காங்கிரஸ் கருதுகிறது. எனவே இன்றளவும் ஊடுருவல்காரர்களுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
தற்போது பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. வங்கதேச ஊடுருவல்காரர்களை காப்பாற்ற எஸ்ஐஆர் பணிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. வாக்கு வங்கிக்காக அந்த கட்சி விஷத்தை கக்கி வருகிறது. இதை தடுத்து அசாமையும் அசாம் மக்களையும் பாஜக பாதுகாக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.