புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையகம் உள்ள அக்பர் சாலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, மத்தியப் பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற அவர்களை தடுப்புகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உமாங் சங்கார், “மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது. இது தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட நாங்கள் அனுமதி கோரி இமெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால், அவர் எங்களை பார்க்க மறுத்துவிட்டார்.
அவர் நாட்டு மக்கள் அனைவருக்குமான குடியரசுத் தலைவர். ஆனால், அவர் பாஜகவின் ஏஜென்டைப் போல செயல்படுகிறார். நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு இல்லையா? நாட்டு மக்களுடன் அவர் நிற்க வேண்டாமா? அப்போதுதானே, நியாயமான தேர்தல் சாத்தியமாகும். நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க விரும்பவில்லையா என்ற கேள்வியை நாங்கள் அவரிடம் கேட்க விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மீனாட்சி நடராஜன், “தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை இழந்துவிட்டது. இதை நான் முதல் நாளில் இருந்தே கூறி வருகிறேன். அந்த உண்மை இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கும் மத்தியப் பிரதேச அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும், வழக்கு விசாரணையின்போது மாநில அரசின் வழக்கறிஞர்கள் எழுந்து நின்றதைக் காண முடிந்தது.
நாங்கள் மாநிலங்களுக்கு எதிராக போராடவில்லை. மாறாக, தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சமரசத்துக்கு உட்படுத்தப்பட்டது குறித்தே பேசுகிறோம். இப்போது அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் அம்பலமாகிவிட்டார்கள்” என விமர்சித்தார்.
நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் பாஜக 2 இடத்திலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் எளிதாக வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் பாஜக பொதுச் செயலாளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். பாஜகவிடம் 48 வாக்குகள் உபரியாக இருப்பதால் 3-வது வேட்பாளராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்புமனுவில் குறிப்பிடப்படாததால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர். அப்போது, ‘மீனாட்சி நடராஜன் மீது நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருடைய மனுவை ஏற்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.