இந்தியா

“மக்களவை, அனைத்து பேரவைகளையும் கலைக்க வேண்டும். ஏனெனில்...” - கார்கே விவரிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: அனைத்துத் தேர்தல்களும் சட்டவிரோதமானவை என தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இன்று ஒட்டுமொத்த நாடும் சட்டவிரோத தேர்தல்களின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது. மோடி ஒரு சட்டவிரோத பிரதமர். அமித் ஷா ஒரு சட்டவிரோத உள்துறை அமைச்சர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்த மாநில முதல்வர்களும் சட்டவிரோதமானவர்களே. இவை அனைத்தும் கலைக்கப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதுவும் வாக்குச்சீட்டுகள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ‘அவர்களது சொந்த ஆட்களே’ சொல்கிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் பல முறைகேடுகள் உள்ளன. அவை ஜனநாயகத்தை சிதைக்கின்றன. இதில் அரசு பல தவறுகளைச் செய்கிறது.

சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும், தேர்தல் செயல்முறை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தும்.

செப்.30 அன்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் 20 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவற்றின் சட்டப் பிரிவு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்கின்றன. இதனால், ஏழைகள், கல்வியறிவு அற்றவர்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 500 வாக்குகள் நீக்கப்பட்டால் அது எவ்வாறு சுதந்திரமான, நியாயமான தேர்தலாக இருக்க முடியும்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் உள்ளிட்ட கடந்த கால தலைவர்கள் யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023-ன் பிரிவு 16-ன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தங்கள் பதவிக்காலத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இறக்கும் வரை அவர்கள் மீது எங்கும் விசாரணை நடத்த முடியாது. இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மோடியும் அவரது தரப்பினரும் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்.

எனவேதான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளது. அக்.6 அன்று டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். நாங்கள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை போராட்டங்களை நடத்துவோம். ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மக்களை விழிப்படையச் செய்வதே எங்கள் பணி. அதன் பிறகும் நீங்கள் ‘மோடி, மோடி’ என தொடர்ந்து கூறினால், நீங்கள் சர்வாதிகாரத்தையே விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT