புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
நாடு முழுவதும் 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர, 3 எம்.பி.க்கள் ராஜினாமா காரணமாக, 3 இடங்களுக்கான இடைத் தேர்தலும் அதே நாளில் நடத்தப்படுகிறது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மூன்று உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக 165, காங்கிரஸ் 63 எம்எல்ஏ-க்களை கொண்டுள்ளது. இதில் பாஜக 2, காங்கிரஸ் 1 வேட்பாளரை நிறுத்தும் சூழல் இருந்தது. இந்நிலையில், பாஜக சார்பில் மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் கடந்த 8-ம் தேதி மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த சூழலில் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில் நிலுவையில் உள்ள கிரிமினல் குற்ற வழக்கு பின்புலம் மறைக்கப்பட்டு இருப்பதாக பாஜக வேட்பாளர் மகேஷ் கேவாத் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி.
இதை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான குழுவினர், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முயன்றனர். ஆனால், அதிகாரிகள் இல்லாத காரணத்தால் அவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது தொடர்பாக தங்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.