வி.டி.சதீசன்

 
இந்தியா

கேரள முதல்வராகிறார் வி.டி.சதீசன் - காங்கிரஸ் தலைமை தேர்வு

மோகன் கணபதி

புதுடெல்லி: கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக வி.டி. சதீசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக், கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தீபா தாஸ்முன்ஷி, “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மே 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பு காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்படுவதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், கேரளாவில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரிடம் காங்கிரஸ் தலைவர் ஆலோசனை மேற்கொண்டார். அனைவருடனும் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், வி.டி.சதீசன் கேரள காங்கிரஸ் சட்டமன்றக் குரு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார். இதன்மூலம், கேரளாவின் அடுத்த முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. இதில், காங்கிரஸ் 63 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, கேரளாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களான அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினர். இதில், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அதாவது முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஒவ்வொரு எம்எல்ஏக்களிடமும் தனித்தனியே கருத்துகள் கேட்கப்பட்டன. இதையடுத்து, இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கும் ஒருவரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையைடுத்து, கடந்த ஒரு வார காலமாக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் கட்சித் தலைவர் கார்கே ஈடுபட்டு வந்தார். வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா, சன்னி ஜோசப், கே.சி. வேணுகோபால் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்ததால் முடிவெடுப்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், வி.டி. சதீசன், கேரள காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, விரைவில் அவரது தலைமையில் கேரளத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT