கவுரவ் கோகாய்
குவாஹாட்டி: அசாம் மாநில பாஜகவில் சுயநலத்திற்காக கட்சி மாறிய முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குழுவே இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அசாம் மாநில பாஜகவை பொருத்தவரை அது இன்னொரு காங்கிரஸ் கட்சியாகவே மாறியுள்ளது.
சுயநலத்துடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர்கள் தான் அங்கு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை இன்று நம் கண் முன்னே இருப்பது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான ஒரு காங்கிரஸ். அதற்கு பாஜக என்ற லேபிள் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோய் ஆட்சிக் காலத்தில் தவறு செய்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இப்போது பாஜகவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
எனவே வரவிருக்கும் தேர்தல் தருண் கோகோய் வழி நடத்திய காங்கிரஸுக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மா வழிநடத்தும் காங்கிரஸுக்கும் இடையிலான போராகவே இருக்கும்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பவனில் (பாஜக தலைமையகம்) தற்போது குழுமியுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது குடும்பத்தின் சுயநலத்துக்காகவே அங்கு கடினமாக உழைக்கிறார்கள்.
ஆனால், நாங்கள் தருண் கோகோயின் லட்சியங்களால் ஈர்க்கப்பட்ட உண்மையான காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸில் இருந்து முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.