திருவனந்தபுரம்: பாலியல் வன்கொடுமை புகாரில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மம்கூடத்தில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் வழக்கில் ராகுல் தலைமறைவானார்.
இந்நிலையில், எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிதி ரீதியாக சுரண்டுவதாகவும் ஒரு பெண் இ-மெயில் மூலம் கேரள முதல்வருக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மீதான 3-வது புகார் ஆகும். இது குறித்து விசாரணை நடத்துமாறு, மாநில போலீஸ் டிஜிபிக்கு அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் ராகுல் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அதிகாரி பூங்குழலி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பாலக்காட்டில் நேற்று காலை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கம் செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பேரவைத் தலைவர் ஏ.என்.ஷம்சீர் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஷம்சீர் நேற்று கூறியதாவது: எம்எல்ஏ ராகுல் மீது 3 பாலியல் புகார்கள் வந்துள்ளன. எனவே, அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டுள்ளேன். அதன் பிறகு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.