சுதான்ஷு திரிவேதி

 
இந்தியா

காங்கிரஸ் இப்போது ‘முஸ்லிம் லீக் - மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ ஆக மாறிவிட்டது: பாஜக விமர்சனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கருத்துகளை குறிப்பிட்டுப் பேசியது காங்கிரஸின் சித்தாந்தப் பின்னணியை முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பியும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதான்ஷு திரிவேதி, “சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஏ.ஜி.நூரானி 2019-ல் எழுதிய ‘ஆர்எஸ்எஸ்: இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல்’ (The RSS: A Menace to India) என்ற புத்தகத்தை மேற்கொள்காட்டி முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி பேசினார்.

அப்போது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கருத்துகளை அன்சாரி குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் கூட்டமொன்றில் பேசிய நேரு, இந்தியாவுக்கு உண்மையான ஆபத்து கம்யூனிசம் அல்ல, மாறாக இந்து வலதுசாரி வகுப்புவாதமே என கூறியதாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜகத் சிங் குண்டேவியா பதிவு செய்திருந்த கருத்துகளை அன்சாரி தெரிவித்தார்.

ஹமீத் அன்சாரி இதைப் பேசியதற்காக நான் அவரை பாராட்ட விரும்புகிறேன். அவர் உண்மையில் மூன்று முக்கிய விஷயங்களைச் செய்துள்ளார். முதலாவதாக, காங்கிரஸ் கட்சி முழுமையாக ஒரு ‘முஸ்லிம் லீக் - மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ ஆக மாறிவிட்டது என்பதை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

இரண்டாவதாக, நேருவின் கருத்துப்படி கம்யூனிசம் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்தது என்பதை அவர் மேற்கோள் காட்டி உள்ளார். ஆனால், இன்றைய காங்கிரஸோ தீவிர இடதுசாரிப் பாதையை நோக்கிச் செல்கிறது.

மூன்றாவதாக, அவர் நேருவைப் பற்றிய குறிப்பைக் கொண்டு வந்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வார்த்தைகளில் வெளிப்படும் விஷயங்களுக்கான பின்னணி, அவரது குடும்பப் பாரம்பரியத்திலேயே மறைந்துள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகிறது” என தெரிவித்தார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ‘பன்முக ஆளுமையை நினைவுகூர்தல்: அப்துல் கஃபூர் நூரானியின் வாழ்க்கையும் காலமும்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு ஹமீத் அன்சாரி பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT