இந்தியா

ஞானேஷ் குமாரின் பதவி நீக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

மோடி, அமித் ஷா மீது சரமாரி தாக்கு

மோகன் கணபதி

புதுடெல்லி: வாக்குத் திருட்டுக்கு பொறுப்பேற்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையர்கள் தங்கள் ஆட்சேபணையை பதிவு செய்திருப்பதாகக் கூறப்படும் விவகாரம், சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம், படிவம் 6 தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்டவை தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘தேர்தல் ஆணையம் தொடர்பான முடிவுகளை, மற்ற தேர்தல் ஆணையர்களுடன் முறையாக ஆலோசிக்காமல் தலைமைத் தேர்தல் ஆணையரே எடுப்பது, தேர்தலின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணியின்போது பயன்படுத்தப்படும் படிவம் 6-ல் அனுமதியற்ற மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையர்கள் இருவரும் 10 மாதங்களில் 14 ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். இது நிறுவன அதிகார வரம்பை மீறும் போக்கையே காட்டுகிறது.

நாடு தழுவிய தீவிர சிறப்புத் திருத்தத்தின்போது பாஜக ஆதரவு பெற்ற சில அதிகாரிகளின் கைகளில் வாக்காளர் பட்டியல் மீதான கட்டுப்பாடு குவிக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை நிர்மூலமாக்கிவிட்டது.

ஏற்கெனவே, 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம், எஸ்ஐஆர்-ன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்த கேள்விகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை கொண்ட ஒரு செயல்முறை, உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் யார் வாக்களிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கப்படக் கூடாது. இது தொடர்பாக ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, பிரச்சினையின் ஆழத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.

பொறுப்புக்கூறல் கொண்டதாக, வெளிப்படையானதாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு தழுவியதாக மாறி இருக்கிறது. நாட்டின் மனநிலைக்கு ஏற்ப காங்கிரஸ் செயற்குழு பின்வரும் விஷயங்களை தீர்மானிக்கிறது.

அனைத்து தார்மிக மற்றும் நிறுவன ரீதியிலான அதிகாரத்தை இழந்துவிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல்களின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்தும், அதன் செயல்முறையின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்தும் எழுந்தள்ள கவலைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புத் தீவிர திருத்த முறையை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13 கோடியே 30 லட்சம் பெயர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும்.

துணிச்சலான வாக்குத் திருட்டு என்பது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்காக தலைமைத் தேர்தல் ஆணையரால் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் பதவி விலகுவதைத் தவிர வேறு எதுவும் நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாது.

மக்களின் வாக்குரிமை திருடப்பட்டதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்பதை பாஜகவும் அது தேர்ந்தெடுத்த அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை, ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் பாதுகாப்பாக இருக்கும் வரை, தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு அதிகார அமைப்பாக மீட்டெடுக்கப்படும் வரை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், வீதிகளிலும் எதிர்த்துப் போராடும்.

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை முறையை மீட்டெடுக்கும் போராட்டம் என்பது இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு சற்றும் குறைவானதல்ல. இந்த போராட்டம் அதன் சரியான முடிவை அடைவதை நாங்கள் உறுதி செய்வோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எஸ்ஐஆர் பணி தொடர்பாக முன்னணி ஆங்கில நாளிதழ் அண்மையில் புலனாய்வு செய்தியை வெளியிட்டது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என்று சுட்டிக் காட்டப்பட்டது.

படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், இசிஐநெட் மென்பொருளைக் கையாள்வதில் மாநில தேர்தல் அலுவலர்களின் அதிகாரம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் செய்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், லைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் பட்டியலிட ஒப்புதல் வழங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT