இந்தியா

“100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் நாடு தழுவிய இயக்கம் தேவை” - காங். செயற்குழுவில் கார்கே பேச்சு

மோகன் கணபதி

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடெல்லியில் இன்று (டிச.27) கூடியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான இந்திரா பவனில் கூடிய இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘‘ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகள் ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள ஒரு காலகட்டத்தில் இந்தக் கூட்டம் கூடியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம். இந்த திட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. இந்த திட்டத்தின் தாக்கத்தின் காரணமாகவே அதற்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டது.

ஆனால், மோடி அரசாங்கம் எவ்வித ஆய்வோ, மதிப்பீடோ, மாநில அரசுகள் அல்லது அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையோ மேற்கொள்ளாமல் இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.

மூன்று வேளாண் சட்டங்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்களோ அதைப் போலவே இதிலும் நடந்து கொண்டுள்ளனர். இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் தேவை. இதற்கான உறுதியான திட்டங்களை தீட்டுவதும், நாடு தழுவிய மக்கள் பிரச்சாரத்தை தொடங்குவதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு தீவிரமான பிரச்சினை. மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட சதி இது.

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை காங்கிரஸ் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் கவலை கொண்டுள்ளது.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய அமைப்புகளால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் மத நல்லிணக்கம் குலைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள், உலக அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டன’’ என்று கார்கே தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவத், சல்மான் குர்ஷித், ராஜீவ் சுக்லா, அபிஷேக் மனு சிங்வி, சசி தரூர், அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT