ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்
புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிப்பதற்காக, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தங்களது முதல் கூட்டத்தை டெல்லியில் இன்று நடத்துகின்றன.
உத்தர பிரதேசத்தில் 403 இடங்களை கொண்ட சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரம் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பாஜகவை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
4 பேர் கொண்ட குழு
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிப்பதற்காக, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தங்களது முதல் கூட்டத்தை டெல்லியில் இன்று நடத்துகின்றன. இக்கூட்டம் 2 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்காக 4 பேர் கொண்ட குழுவை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.
இதில் மாநிலங்களவை எம்.பி.யும் அகிலேஷ் யாதவின் மாமாவுமான ராம் கோபால் யாதவ், கட்சியின் மாநில தலைவர் ஷியாம்லால் பால் மற்றும் மக்களவை எம்.பி.க்கள் ராஜீவ் ராய், இக்ரா ஹசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.