சி.ஜே.ராய்

 
இந்தியா

கான்ஃபிடன்ட் குரூப் தொழிலதிபர் சி.ஜே.ராய் தற்கொலை: ஐ.டி சோதனை நடப்பதால் அதிர்ச்சி

வெற்றி மயிலோன்

பெங்களூரு: பிரபல தொழிலதிபரான கான்ஃபிடன்ட் குரூப் தலைவர் சி.ஜே.ராய் (57), இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். அவரது கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவரான சி.ஜே.ராய், லாங்ஃபோர்ட் டவுனில் உள்ள தனது பங்களாவில் தலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் மீட்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராய் உடனடியாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள நாராயணா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

          

நேற்று முதல் வருமான வரித் துறை சி.ஜே.ராய் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறது. சோதனைகளின்போது, அவர் தனது வருமான ஆதாரங்களுக்கு அதிகமாக சொத்துகளை வைத்திருப்பது தெரியவந்தது என தகவல்கள் வெளியானது. இன்றும் சோதனை தொடரும் நிலையில், ராய் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், "இன்று அசோக் நகர் காவல் நிலைய எல்லையில் கான்ஃபிடன்ட் குரூப் தலைவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கடந்த 2, 3 நாட்களாக வருமான வரித் துறையினர் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வந்தனர்" என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு முக்கிய ரியல் எஸ்டேட் டெவலப்பரான கான்ஃபிடன்ட் குழுமம் தென்னிந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் வணிகம் செய்து வருகிறது. கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த சிஜே ராய், மோகன்லாலின் பெரிய பட்ஜெட் திரைப்படமான காஸனோவா (2012) உட்பட சில மலையாள படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில சீசன்களின் முதன்மை விளம்பரதாரராகவும் இவரின் நிறுவனம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT