இந்தியா

‘அமெரிக்க அழுத்தத்துக்கு மோடி அரசு பணிகிறது’ - யுபிஐ கட்டண விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

மோகன் கணபதி

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிப்பதற்கான கதவை மோடி அரசு மறைமுகமாக திறந்துவிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ராகுல் காந்தி, இதன்மூலம் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அரசு பணிந்து போவதாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘யுபிஐ பரிவர்த்தனைகள் மீது கட்டணம் விதிப்பதற்கான கதவை மோடி அரசு மறைமுகமாக திறந்துவிட்டுள்ளது.

இனி, ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படலாம். இத்தகைய பரிவர்த்தனைகள் மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கையில் 5% மட்டுமே. என்றாலும், யுபிஐ-ன் மொத்த பரிவர்த்தனை மதிப்பில் இது கிட்டத்தட்ட 65% பங்கைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அரசு கூறுகிறது. ஆனால், வணிகர்கள் மீது விதிக்கப்படும் இந்த கட்டணம் இறுதியில் எங்கிருந்து வரும்? அது பொருட்களின் விலையில் சேர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களின் பையிலிருந்தே வசூலிக்கப்படும்.

இந்தியாவின் பூஜ்ஜிய எம்டிஆர் கொள்கையை அமெரிக்கப் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றன. இப்போது அதே திசையில் கொள்கையை மாற்றுவதற்கான பாதையை மோடி அரசு திறந்துவிட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின்போது நடந்தது போலவே, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் மோடி பணிந்துபோகிறார்’ என விமர்சித்துள்ளார்.

முன்னதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரூ.2,000 வரையிலான வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அல்லது சேவை வழங்குநர்கள் எந்தவித நேரடி அல்லது மறைமுகக் கட்டணத்தையும் விதிக்க முடியாது. இதன்மூலம், எண்ணிக்கையின் அடிப்படையில் 96% யுபிஐ பரிவர்த்தனைகள் கட்டணமில்லா வரம்புக்குள் தக்கவைக்கப்படுகின்றன’ என்று தெரிவித்திருந்தது. இதன்மூலம், ரூ.2000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கக்கூடும் என்பது தெரிய வருகிறது.

இந்த குறிப்பிட்ட வரம்பில் கட்டணம் வசூலிப்பதா என்பது குறித்தும் எம்டிஆர் அளவு குறித்தும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழுவிடம் உள்ளது.

எம்டிஆர் என்பது டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்போது வணிகர்கள், வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களுக்கு செலுத்தும் கட்டணமாகும். டெபிட் அல்லது கிரிடெட் கார்டுகள் போன்ற பிற கட்டண முறைகளைப் போல் அல்லாமல், யுபிஐ மூலம் பணம் பெறுவதற்கு வணிகர்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்துவதில்லை.

யுபிஐ மீதான எம்டிஆர் கட்டணம், குறிப்பிட்ட வரம்புக்கு மேற்பட்ட சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இக்கட்டணம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை விட குறைவாகவே இருக்கும் என்றும் அரசு ஏற்கெனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT