புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்தது.
இதையடுத்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்பின் ஈரான் அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதற்கு அனுமதி பெற்றது. ரஷ்யா உட்பட பிற நாடுகளில் இருந்தும் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் மூலம் எரிபொருள் வரத்து அதிகரித்தது
இதையடுத்து மாநிலங்களுக்கான வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீட்டை கடந்த வாரம் 50 சதவீதமாக உயர்த்தியது. உணவு விடுதிகள், ஓட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்கள், பொதுமக்கள் நலன்களுக்கு உதவுவதற்காக இந்த ஒதுக்கீட்டை உயர்த்தியதாக பெட்ரோலித்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்திருந்தார்.
தற்போது கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்தை 70 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தற்போது கூடுதல் விநியோக சிலிண்டர்களை எஃகு, வாகனங்கள், ஜவுளி, சாயம், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு நீரஜ் மிட்டல் கடிதம் எழுதியுள்ளார்.