புதுடெல்லி: போலி சான்றிதழ் தொடர்பான ஒரு வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “வேலை இல்லாமல் எந்த தொழிலும் செய்ய தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைப் போல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பின்னர் விளக்கம் அளித்த நீதிபதி சூர்யகாந்த், “போலி சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன். ஒட்டுமொத்த இளைஞர்களை அல்ல” என்று தெரிவித்தார். இந்த சூழலில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அப்ஜித் தீப்கே என்பவர் கடந்த 16ம் தேதி இன்ஸ்டாகிராமில், “காக் ரோச் ஜனதா கட்சி” (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) என்ற பக்கத்தை தொடங்கினார். எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களிலும் இதே பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன.
கரப்பான் பூச்சி கட்சியில் இணைய வேலை வாய்ப்பற்றவராக இருக்க வேண்டும். சோம்பேறியாக இருக்க வேண்டும். ஆன்லைனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். கோபத்தை அழகாக வெளிப்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று அப்ஜித் கூறியுள்ளார்.
மேலும், ஒரு கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் தேர்தலுக்குப் பிறகு அணி மாறினால் அடுத்த 20 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது உட்பட அப்ஜித் 5 வாக்குறுதி அளித்துள்ளார்.
கரப்பான் பூச்சி கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.5 கோடி பேர் பின் தொடர்கின்றனர். எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கரப்பான்பூச்சி கட்சி பக்கங்களை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்தக் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் நேற்று இந்தியாவில் முடக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் உயிரிழப்பது இல்லை என்ற வாசகத்துடன் காக்ரோச் இஸ் பேக் (கரப்பான் பூச்சி திரும்பி விட்டது) என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் புதிய பக்கம் தொடங்கப்பட்டது. இதனிடையே கரப்பான்பூச்சி கட்சியை போன்று ஜென் ஸி இளைஞர்கள் சார்பில் தேசிய ஒட்டுண்ணி முன்னணி என்ற பெயரில் புதிய ஆன்லைன் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது.