இந்தியா

உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் தாயார் மறைவு

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் இருந்தவர்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி இன்று காலமானார். உத்தராகண்டின் பவுரி மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான பஞ்சூரில் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் இருந்தவர்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி தனது 91-வது வயதில் காலமானார். அவர் உத்தரகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான பஞ்சூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். முதல்வர் யோகியின் தாயார் சாவித்திரி தேவி நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

உத்தர[ பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அங்கு 50,000 மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாயாரின் மறைவுச் செய்தி தெரிந்த பிறகும், அவர் தனது நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தியுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பவுரிக்குச் செல்லக்கூடும் என்று அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சர்வேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி அவ்வப்போது பூர்வீகக் கிராமம் சென்று தனது தாயாரைச் சந்தித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாவித்ரி தேவி, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, முதல்வர் யோகி அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்திருந்தார். தாயார் சாவித்ரி தேவியின் இறுதிச் சடங்குகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் யோகியின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 20-ல் மறைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த அவரது உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக காலமானார். அப்போது, கரோனா ஊரடங்கு காலம் என்பதால், முதல்வர் யோகியால் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT