திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி - ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்து உள்ளது.
கேரள சட்டப்பேரவையில் மொத்தம் 140 இடங்கள் உள்ளன. இந்நிலையில் கேரள சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தற்போது கேரளத்தை ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும்(எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎஃப்) இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சிஎன்என்-நியூஸ்18 நடத்திய வோட்வைப் என்ற கருத்துக்கணிப்பில் இத்தகவல்கள் வெளியே வந்துள்ளன.
எல்டிஎஃப், யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளும் சுமார் 36 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 14.9% வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பின்படி எல்டிஎஃப் கூட்டணி 68 முதல் 73 தொகுதிகளிலும், யுடிஎஃப் கூட்டணி 64 முதல் 70 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் என்டிஏ கூட்டணி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோட்வைப் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயனே மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று அதிக அளவில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன் முதல்வராக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன், வி.டி.சதீஷன் ஆகிய இருவருக்குமே சுமார் 29 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கடுத்த இடங்களில் பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.கே.ஷைலஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆகியோர் முறையே 10.8%, 9.3%, 8.4%வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த 2021-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் எல்டிஎஃப் கூட்டணி 99 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 தொகுதிகளைக் கைப்பற்றியது.