இந்தியா

எதிர்க்கட்சிகளின் பேரணியில் சிஜேபி கலந்து கொள்ளாதது ஏன்? - அபிஜித் திப்கே விளக்கம்

ஆர்.ஷபிமுன்னா

புது டெல்லி: ராம்லீலா மைதான எதிர்க்கட்சிகளின் பேரணியிலிருந்து காக்ரோச் ஜனதா பார்ட்டி(சிஜேபி) விலகி இருக்கிறது. இதற்கானக் காரணத்தை சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே விளக்கியுள்ளார்.

வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில், இண்டியா கூட்டணியின் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு சிஜேபி நிறுவனரும் தலைவருமான அபிஜித் திப்கே ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் ஏதோ ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு மட்டும் உரியது அல்ல என்றும், வாக்குத் திருட்டுக்கு எதிராகப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் சிஜேபி ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். இதனால், சிஜேபியினரும் இண்டியா கூட்டணி பேரணியில் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் தற்போது மாற்றம் செய்த சிஜேபி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிஜேபி தனது சுதந்திரமான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் சிஜேபி நேரடியாகக் கலந்துகொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே கூறுகையில், “நாங்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறோம், இதனுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். ஆனால், சிஜேபி என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. இது ஒரு நடுநிலையான தளம். இதை அப்படி வைத்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, நேற்று டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை அபிஜித் திப்கே சந்தித்தார். அப்போது அவர், தங்கள் அமைப்பின் போராட்டங்களுக்கு மம்தா அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஜந்தர் மந்தரில் நடைபெற்ற முதல் போராட்டத்தின் போதும், டெல்லி காவல்துறையால் சவுரப் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டபோதும், மம்தா பானர்ஜி தங்களுக்கு ஆதரவாக நின்றதற்காக அவருக்கு நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார்.

இது குறித்து அபிஜித் திப்கே கூறுகையில், "ஜந்தர் மந்தரில் நாங்கள் நடத்திய முதல் போராட்டத்தின்போது மம்தா பானர்ஜி எங்களுக்கு ஆதரவளித்தார், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கவே அவரைச் சந்தித்தேன். அவர் எப்போதும் இளைஞர் இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். டெல்லி காவல்துறை சவுரப் மற்றும் அசுதோஷை கைது செய்தபோதும், மம்தா பானர்ஜி எங்களுடன் உறுதியாக நின்றார்" என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT