பெங்களூரு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்கள், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து நிதியுதவி பெற்று உள்ளனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லியில் சிஜேபி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுதொடர்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஓராண்டுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்று மூவரும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.
இந்த சூழலில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிஜேபி தலைவர்களுக்கு நிதியுதவி செய்துள்ளன. இதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே நிதியுதவிகளை பெற்று உள்ளார்.
அதன் ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா பாகிஸ்தான் அரசியல் தலைவர்களிடம் இருந்து பணம் பெற்று உள்ளார். இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.