புதுடெல்லி: அமெரிக்காவில் படித்து வந்த அபிஜித் தீப்கே என்ற இந்திய மாணவர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கத்தை சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் தொடங்கினார்.
இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த இயக்கம் கிண்டலாக தொடங்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இந்நிலையில் இந்தியாவில் சமீபத்திய தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் ஜூன் 6-ம் தேதி போராட்டம் நடைபெறும் என இந்த அமைப்பினர் அறிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். அமைதி வழி போராட்டத்தை வலியுறுத்திய அவர் நேராக போராட்டக் களத்துக்குச் சென்றார். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த அமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட், சிபிஎஸ்இ, கியூட், எஸ்எஸ்சி போன்ற தேர்வுகள் தொடர்பான பிரச்சினைகளுக்காக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். முன்னதாக, ஆதரவாளர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும், எந்த மோதல்களிலும் ஈடுபடக் கூடாது என்று தீப்கே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
போராட்டத்தில் அபிஜித் தீப்கே பேசுகையில், “நண்பர்களே, இது ஒரு நீண்ட போராட்டம். சமூக ஊடகங்களில் நாம் அமைச்சர் பிரதானின் ராஜினாமாவை கோரத் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இந்த நபர்கள் எவ்வளவு வெட்கமற்றவர்கள் என்றால், நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நமது கணக்குகளை முடக்குவது, பதிவுகளை நீக்குவது போன்ற பிற திசை திருப்பல்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். எங்களது பதிவுகளை உங்களால் நீக்க முடியும், ஆனால் இந்த இடத்தில் இருந்து எங்களை உங்களால் அழிக்க முடியாது’’ என்றார்.
இந்தப் போராட்டத்துக்கு லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சோனம் வாங்சுக் நேற்று போராட்டத்தில் நேரில் பங்கேற்றார். மாலையில் அபிஜித் தீப்கே புறப்பட்டதை தொடர்ந்து நேற்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது.