புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட முயன்ற சிஜேபி கட்சியினரை கைது செய்தது காவல் துறை. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இனிமேல் அனுமதி அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 3 புதிய இடங்களை டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தடையை மீறி இன்று (அக்.13) காலை சிஜேபி கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சிஜேபி கட்சியைச் சேர்ந்த சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உட்பட சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
“கரப்பான்கள் இன்று காலை மூவர்ணக் கொடியுடன் ஜந்தர் மந்தரில் நுழைந்தனர். அதன் பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். சவுரவ் தாஸ், அசுதோஷ், அஜிங்கியா மற்றும் சிலர் கைதாகி உள்ளனர். எங்களது எதிர்ப்பை நீங்கள் எந்தப் பட்டியலில் இருந்தும் நீக்க முடியாது” என்று பிரதமர் மோடியை டேக் செய்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஜந்தர் மந்தர் மீட்கப்பட்டது. போராட்ட களத்துக்குள் நுழைந்த எங்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், இதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். நம்மால் முடியும்” என்று சவுரவ் தாஸ் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதற்கு அபிஜித் திப்கே, காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். டெல்லியில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடுவதற்கான மாற்று இடங்களாக ராம்லீலா மைதானம், புராடி மைதானம், கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானத்தில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.