இந்தியா

“கல்வி அமைச்சர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவது ஏன்?” - அபிஜீத் தீப்கே

மோகன் கணபதி

புனே: ‘கல்வி அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்?’ என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமைச்சர்கள், அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட கல்வித் துறையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் சொந்தப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால், நமது அரசுப் பள்ளிகள் விரைவாகவும் அற்புதமாகவும் மேம்படும்.

ஆனால், அவர்கள் அனைவரும் ஏன் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? தங்கள் சொந்த வேலையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், போதிய வசதிகள் இல்லாதது குறித்து அவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பழுதுபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கின.

இந்நிலையில், அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். அபிஜீத் தீப்கேவின் இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அபிஜீத் தீப்கே உயர் கல்விக்காக அமெரிக்காவை ஏன் தேர்ந்தெடுத்தார் என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். "நான் சொல்வதைச் செய், நான் செய்வதைப் பின்பற்றாதே என்ற பாணியில் இது உள்ளது. அப்படியென்றால் பாஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு ஏன் பணம் செலுத்தினீர்கள்? வீட்டிலேயே படித்திருக்கலாமே,” என்று அவரது 'எக்ஸ்' பதிவுக்கு ஒருவர் பதில் அளித்துள்ளார்.

அதிகாரிகளும் அவர்களது குழந்தைகளும் தனித்தனி நபர்கள் என்றும், கல்வி அமைப்பின் தோல்விகளுக்குப் பெற்றோரைப் பொறுப்பாக்குவதற்காக ஒரு குழந்தையின் பள்ளித் தேர்வை குறிவைக்கக் கூடாது என்றும் சிலர் மாறுபட்ட வாதங்களை முன்வைத்துள்ளனர்.

அதேநேரத்தில் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் பிற பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT