அபிஜித் தீப்கே
புதுடெல்லி: கிராமப்புற அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்படும் என அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், “80-வது சுதந்திர தினமான வரும் 15-ம் தேதி, அரசு பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்படும். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள எனது கிராமமான ஹிங்கோலிக்குச் சென்று, அங்குள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துமாறு கிராமத் தலைவரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.
இந்த காணொலியைக் காணும் அனைத்து கிராமத் தலைவர்களும், தங்கள் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த உதவ வேண்டும். பள்ளிகளின் இப்போதைய நிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட பிறகு உள்ள நிலை குறித்த புகைப்படம், வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவை சிஜேபி-யின் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.” என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு நிலைமையை குறிப்பிட்டு, “இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்னமும் மாணவர்கள் பள்ளிகளுக்கு நீண்டதூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால் குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாம் புதிய நாடாளுமன்றத்தையும், புதிய பிரதமரின் இல்லத்தையும் அமைத்துள்ளோம். அப்படியானால், ஏன் நம்மால் கிராமங்களில் புதிய பள்ளிகளை உருவாக்க முடியவில்லை? கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை நமது நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா? அந்தக் குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம், பெரிய நகரத்தில் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் வசதிகளை அவர்களால் பெற முடியாத நிலையை ஏன் மாற்ற முடியவில்லை?” என வினவியுள்ளார்.
மேலும், “கிராமங்களில் வசிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களின் பள்ளிகளைச் சீரமைப்போம் என்று நாம் வாக்குறுதி அளிப்போம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, உழைத்து, செயல்பட்டால், கிராமப் பள்ளிகளை நிச்சயமாக நம்மால் சரி செய்ய முடியும். ஏனெனில், உண்மையான இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது.
இந்த முயற்சியில் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். இந்த வசதிகள் இல்லை என்றால் அதுபற்றி எங்களுக்கு தெரிவிக்கலாம். இதற்காக சிஜேபி இணையதளத்தில் விரைவில் ஒரு படிவம் வெளியிடப்படும். அதைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.