ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உடன் முன்னாள் தனி செயலாளர் வி.கே.பாண்டியன். (கோப்புப்படம்)

 
இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ஆய்வில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை: தலைமை நிர்வாகி

செய்திப்பிரிவு

ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. பழங்கால மன்னர்கள் வழங்கிய தங்கம், வைரம், வைடூரிய நகைகள், கிரீடங்கள் ஆகியவை கோயிலின் பொக்கிஷ அறையில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன.

கடந்த 1978ம் ஆண்டில் பொக்கிஷ அறை திறக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024ம் ஆண்டு ஜூலையில் கோயிலின் பொக்கிஷ அறை மீண்டும் திறக்கப்பட்டு ஆய்வுப் பணி தொடங்கியது.

இது தொடர்பாக கோயிலின் தலைமை நிர்வாகி அரவிந்தா குமார் பதி நேற்று முன்தினம் கூறியதாவது: கடந்த 1978-ம் ஆண்டு ஆய்வு அறிக்கையுடன் ஒப்பிட்டு பொக்கிஷ அறையின் நகைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

ஒவ்வொரு நகையும் கடந்த 1978-ம் ஆண்டு வரிசை எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்யப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் எந்தவொரு தவறும், முரண்பாடும் கண்டறியப்படவில்லை. பொக்கிஷ அறையின் தங்கம், வெள்ளி, வைர நகைகள், கடந்த 1978-ம் ஆண்டு பட்டியலுடன் 100 சதவீதம் ஒத்துப்போகின்றன.

ஒரு முரண்பாடு கூட கண்டறியப்படவில்லை. மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வு நடத்தி வருகிறோம். பொக்கிஷ அறை நகைகள் காணாமல் போனதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே.

பொக்கிஷ அறையில் நடத்தப்பட்ட ஆய்வு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நகையும் புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. சிசிடிவி கேமரா கண்காணிப்பு, அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலர்களின் மேற்பார்வையில் 3டி மேப்பிங் செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த ஆய்வுப் பணியும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட்டு வருகிறது. ஜெகந்நாதரின் ஆசியுடன் இந்த பணியை விரைவில் நிறைவு செய்வோம். இவ்வாறு கோயிலின் தலைமை நிர்வாகி அரவிந்தா குமார் பதி தெரிவித்தார்.

புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் கடந்த 1978ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் ஜூலை 23ம் தேதி வரை 72 நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பொக்கிஷ அறையில் 454 தங்க நகைகள் இருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவற்றின் எடை 12,838 பாரி ஆகும் (ஒரு பாரி என்பது 10- 11 கிராமுக்கு சமம்). மேலும் 293 வெள்ளி நகைகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவற்றின் எடை 22,153 பாரி ஆகும். இந்த தங்க, வெள்ளி நகைகள் பொக்கிஷ அறையின் உள்அறை, வெளி அறை மற்றும் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

தற்போது வரை வெளி அறை, கூடத்தில் இருந்த நகைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. உள்அறையில் உள்ள நகைகளின் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுப் பணி பல்வேறு கட்டங்களாக நடை பெறு கிறது. கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கிய ஆய்வு 9 நாட்கள் வரை நீடித்தது. தற்போது ஆய்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. வரும் மே 11-ம் தேதி மீண்டும் ஆய்வு தொடங்க உள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குகளைப் பெறுவதற்காக புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இவை அனைத்தும் பொய் என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது. பகவான் ஜெகந்நாதர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக கடந்த பேரவைத் பேரவைத் தேர்தலின் போதே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் விரிவான, தெளிவான விளக்கம் அளித்தார். அவர் கூறியது அனைத்தும் உண்மை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT