புதுடெல்லி: நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த வேதியியல், தாவரவியல் பேராசிரியர்கள் வினாத்தாள் கசிவின் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
என்டிஏ சார்பில் நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாளை தயாரிக்க நாடு முழுவதும் இருந்து முன்னணி பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தலா 3 கேள்விகளை வரையறுக்க வேண்டும். அனைத்து பேராசிரியர்களும் வழங்கும் கேள்விகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நீட் வினாத்தாள் தயாரிக்கப்படும்.
எஸ்பிஐ பாதுகாப்பு பெட்டகங்கள்: ஒவ்வொரு நீட் தேர்வுக்கும் இரு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். இதில் பிரதான வினாத்தாள் அந்தந்த மாநிலங்களின் எஸ்பிஐ வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும். இந்த வினாத்தாளே தேர்வின் போது வழங்கப்படும். மற்றொரு வினாத்தாள் கனரா வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும். ஒருவேளை தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிவு புகார் எழுந்தால் இந்த வினாத்தாள்கள் தேர்வின் போது வழங்கப்படும்.
கடந்த 3-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வின் போது எஸ்பிஐ வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. ஆனால் அன்றைய தினம் மாலையே வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ராஜஸ்தானின் சிகார் நகரில் செயல்படும் நீட் பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அமைப்புக்கும் இ-மெயில் வாயிலாக அவர் புகார் மனுவை அனுப்பினார்.
இதுதொடர்பாக ராஜஸ்தான் தனிப்படை போலீஸாரும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தின. இதில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதுவரை 9 பேர் கைது: தற்போது நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ விசாரணையில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த தினேஷ் பிவால், அவரது தம்பிகள் மங்கிலால் பிவால், விகாஷ் பிவால் ஆகியோர் நீட் வினாத்தாளை பல லட்சங்கள் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தங்கள் குடும்பத்தில் எம்பிபிஎஸ் பயிலும் உறவினர்களுக்கு வினாத்தாளை வழங்கி உள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனே நகரில் அழகு நிலையம் நடத்தும் மணிஷா என்பவர் கடந்த ஆண்டு தனது மகளை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்தார். அப்போது நீட் வினாத்தாள் கசிவு கும்பலுடன்
அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு மணிஷாவுக்கு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்து அவரும் பல லட்சங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த சுபம் காரினார் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் ஹரியானாவை சேர்ந்த பலருக்கு வினாத்தாளை விற்பனை செய்திருக்கிறார்.
மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான ஏஜென்ட் தனஞ்செய் லோகாண்டே என்பவர் நூற்றுக்கணக்கானோருக்கு நீட் வினாத்தாளை விற்பனை செய்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஹரியானாவின் குருகிராமை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் யாஷ் யாதவும் ஏராளமானோருக்கு நீட் வினாத்தாளை விற்பனை செய்திருக்கிறார். இவர்கள் மூலமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர், பிஹார், டெல்லி, உத்தராகண்ட், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருக்கிறது.
இந்த சூழலில் நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிாரவின் புனே நகரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த இரு பேராசிரியர்கள் மூலமாகவே நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கும் என்டிஏ மூத்த அதிகாரிகள் சிலருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.