புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் சாதி விவரங்களைச் சேகரிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமூக நீதி கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு துல்லியமான சாதித் தரவுகள் அவசியமாகிறது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பின்போது, சாதி விவரங்களைச் சேகரிப்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள கேள்விகள் தவறான வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக உள்ளன.
குறிப்பாக, சாதி விவரங்களைப் பதிவு செய்ய ‘குறிப்பிட்ட தெரிவுகள் இல்லாத திறந்த வினா’ முறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையின் கீழ், மக்கள் தங்கள் சாதியின் பெயரை எப்படி குறிப்பிடுகிறார்களோ அப்படியே பதிவு செய்யப்படுகிறது. ஒரே சாதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்கள், துணைச் சாதிப் பெயர்கள் அல்லது உள்ளூர் பெயர்களால் அறியப்படலாம்.
இவற்றை அப்படியே பதிவு செய்தால், ஒரே சாதி ஆயிரக்கணக்கான பெயர்களாகப் பிரிக்கப்படலாம். இது மிக அதிகமான சாதிப் பிரிவுகளுக்கு வழிவகுக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உருவாக்கப்படும் தரவுகளைப் பயன்படுத்துவதை கடினமாக்கும். ஒரு சமூக உறுப்பினர்களின் சரியான எண்ணிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால், அதன் நிலையும் தவறாகவே மதிப்பிடப்படும்.
தவறான தரவுகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர விளிம்புநிலை சமூகங்களைப் பாதிக்கலாம். எனவே தற்போதுள்ள சாதிவாரி கணக்கெடுப்புக்கான வினாத்தாளைத் திரும்பப் பெற வேண்டும். இதற்கு பதிலாக சாதி விவரங்களை விரிவாகச் சேகரிக்க வேறு முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.