புதுடெல்லி: கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகேதாட்டு அணையின் விரிவான திட்டஅறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பி உள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவுக் கொண்ட புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது. இதை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில், கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதை பரிசீலித்த மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்கள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருந்ததால், அதை திருத்தி வழங்குமாறு மத்திய நீர்வள ஆணையம் மீண்டும் உத்தரவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ழ்ந்நிலையில், ‘‘அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அந்த அறிக்கை குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?’’ என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தது.
முரணான தகவல்கள்: அதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் வகையில் இருந்ததால், அந்த திட்ட வரைவு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது. திட்ட அறிக்கையைத் திருத்தியோ அல்லது புதிய விரிவான திட்ட அறிக்கையையோ தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவன சமுத்திரம் நீர்மின் திட்டத்தை மேகேதாட்டு அணை திட்டத்துடன் இணைக்கப் போவதாகத் தெரிவித்தது. அதற்காக 4.75 டிஎம்சி நீரில் இருந்து 6.90 டிஎம்சி நீரை பயன்படுத்தப் போவதாகக் கர்நாடக அரசு குறிப்பிட்டிருந்தது.
இந்த கூடுதலான நீர் பயன்பாடு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதேபோல, பெங்களூரு மாநகரின் தற்போதைய குடிநீர் தேவை 16.1 டிஎம்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் பழைய புள்ளி விவரங்களில் இருந்து முரணாக இருக்கின்றன. எனவே கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை ஏற்கப்படவில்லை. இவ்வாறு மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது கர்நாடக அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே, கர்நாடக அரசு மீண்டும் திட்ட அறிக்கையை திருத்தி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்துக்கு 3,500 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு
‘‘காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கர்நாடக அரசின் தரப்பில் தற்போதைய சூழலில் நீரை திறந்துவிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
கடைசியில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறும்போது, ‘‘கர்நாடக அணைகளில் தற்போது 55 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அடுத்த 2 மாதங்களில் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. எனவே, வறட்சி கால நீர் பங்கீட்டின்படி, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.