புதுடெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தையில் போட்டியை அதிகரிக்கும் புதிய முயற்சியாக, அல் ஹிந்த் ஏர், ஃப்ளை எக்ஸ்பிரஸ் ஆகிய 2 புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ உள்ளது. இந்த நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையால் சமீபத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு சுமார் 65 சதவீதமாக உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா குழுமம் சுமார் 27 சதவீத பங்கு வகிக்கும் நிலையில் சிறிய நிறுவனங்களுக்கு குறைந்த இடமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியை அதிகரிக்க மேலும் பல நிறுவனங்களுக்கான தேவை எழுந்துள்ளது.
இந்நிலையில் அல் ஹிந்த் ஏர், ஃப்ளை எக்ஸ்பிரஸ் ஆகிய 2 புதிய விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த வாரம் தடையின்மை சான்றிதழ் (என்ஓசி) வழங்கியுள்ளதாக இந்த துறையின் அமைச்சர் ராம் மோகன் நாயுடு ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவின் அல் ஹிந்த் குழுமத்தை சேர்ந்த அல் ஹிந்த் ஏர், முதன்மையாக தென்னிந்தியாவில் தனது சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.