இந்தியா

சிகரெட், புகையிலைப் பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி பிப்.1 முதல் அமல்

மோகன் கணபதி

புதுடெல்லி: சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கூடுதல் கலால் வரி பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 40% ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இந்த கலால் வரி கூடுதலாக வசூலிக்கப்படும். இதனால் இவற்றின் விலை பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கூடுதல் கலால் வரி பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரியை அரசாங்கம் விதித்துள்ளது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 40% ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இந்த கலால் வரி கூடுதலாக வசூலிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கலால் (திருத்த) மசோதா 2025, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் காலாவதியான பிறகு, புகையிலை மற்றும் அது தொடர்பான பொருட்கள் மீதான கலால் வரிகளை திருத்தும் (உயர்த்தும்) நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வசூலிக்கப்படும் வருவாய், பகிரக்கூடிய நிதிக்குச் செல்லும் என்றும், பின்னர் அது மாநிலங்களுக்கு 41% மறுபகிர்வு செய்யப்படும்.

பல நாடுகள் புகையிலை வரிகளை ஆண்டுதோறும் திருத்தி அமைக்கின்றன. பல நாடுகள் அதை பணவீக்கத்துடன் இணைக்கின்றன. இந்தியாவிலும்கூட ஜிஎஸ்டிக்கு முன்பும் புகையிலைப் பொருட்கள் மீதான வரி ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டது. இதன் நோக்கம், மக்கள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதே.

ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்த கலால் வரியை அரசாங்கம் மீண்டும் கொண்டு வருகிறது. அரசாங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 1.12 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான புகையிலை சாகுபடி நிலங்கள் மற்ற பயிர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த நிலங்களில், கரும்பு, நிலக்கடலை, எண்ணெய் பனை, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வெங்காயம், பயிறு வகைகள், மஞ்சள் போன்றவை பயிரிடப்படுகின்றன’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT