இந்தியா

சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவு அவகாசம் நீட்டிப்பா? - மத்திய அரசு புதிய விளக்கம்

தமிழினி

புதுடெல்லி: சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடு எதுவும் விதிக்கவில்லை என்றும், நகரப் பகுதிகளில் 25 நாட்களும் ஊரகப் பகுதிகளில் 45 நாட்களும் காஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சில செய்தி அறிக்கைகளும், சமூக ஊடகப் பதிவுகளும் வெளியாகியுள்ளதாக மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

அதன்படி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கு 45 நாட்கள், ஒற்றை சிலிண்டர் இணைப்புகளுக்கு 25 நாட்கள் மற்றும் இரட்டை சிலிண்டர் இணைப்புகளுக்கு 35 நாட்கள் என முன்பதிவு செய்வதற்கான புதிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அத்தகைய காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று இதன்மூலம் மத்திய அரசு தெளிவுபடுத்துகிறது.

          

தற்போது நடைமுறையில் உள்ள சிலிண்டருக்கான முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அவை, நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என்றும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்றும் (இணைப்பு வகை எதுவாக இருப்பினும்) ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர்வதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டரை தேவையற்ற அல்லது பதற்றத்தின் காரணமாக முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடையே மத்தியக் கிழக்கில் நடந்து வரும் போரால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இந்நிலையில், காஸ் சிலிண்டர் முன்பதிவில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் பரவியது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மீண்டும் காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய 45 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் அல்லாத பிறர், ஒரு சிலிண்டர் இணைப்புக்கு 25 நாட்களுக்கும், 2 சிலிண்டர் இணைப்புக்கு 35 நாட்களும் காத்திருக்க வேண்டும் என்று விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டதாக பரவிய தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை மத்திய அரசு இப்போது மறுத்துள்ளது.

இதனிடையே, இந்தியன் ஆயில் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எல்பிஜி முன்பதிவு காலக்கெடுகள் மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. இதில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது உள்ளபடி நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு, 25 நாட்களுக்குப் பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.

கிராமப்புறங்களில் 45 நாட்களுக்குப் பிறகு முன்பதிவு செய்ய வேண்டும். இந்த காலக்கெடு தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி தொடர்கிறது. மக்கள் தவறான தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம். தேவையற்ற அச்சத்தால் முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நாட்டில் போதுமான அளவில் எல்பிஜி சிலிண்டர் இருப்பு உள்ளது என தெரிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT