புதுடெல்லி: தீபாவளி வரை எந்தப் போராட்டங்களையும் நடத்தும் திட்டம் இல்லை என்றும் அனைவரும் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட வேண்டு்ம் என்றும் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) குளறுபடி நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மற்றும் எதிர்க்கட்சியினர் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறியதாவது: டெல்லியில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சம்பவங்களால் தொண்டர்கள் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
குறிப்பாக, எனது பெற்றோரும், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரின் பெற்றோரும் கவலையில் உள்ளனர்.
எனவே, தீபாவளி வரை எந்தப் போராட்டங்களையும் நடத்தும் திட்டம் இல்லை. சில நாட்களுக்கு உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுங்கள்.
மேலும், சிஜேபி நிர்வாகிகளை சிறையில் அடைத்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, டெல்லியின் மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்னிலையில், நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கா, தாஸ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.