கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் சந்திரநாத் ராத் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. 9-ம் தேதி சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக, சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் மே 6-ம் தேதி இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில், கொலையாளிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் உத்தர பிரதேசம், பிஹாருக்கு சென்ற போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் 3 கூலிப்படையினர் உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க காவல் துறையின் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், வடக்கு 24 பர்கானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மேற்கு வங்க காவல் துறை பரிந்துரை செய்திருந்தது.
இதன் அடிப்படையில், இந்த வழக்கின் பொறுப்புகளை மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் முறைப்படி நேற்று பெற்றுக் கொண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.