புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்குகளை நவம்பர் 17-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு, மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”எஸ்ஐஆர் தொடர்பான அனைத்து உத்தரவுகளும் தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே பிறப்பிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
செய்தித்தாளில் வெளியான செய்தியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகள் விசாரணைக்கு ஏற்றதல்ல” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு விளக்க மனுக்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.