புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கக் கோரி நடத்தப்பட்ட இண்டியா கூட்டணிப் போராட்டத்தின்போது, அகில இந்திய வானொலி நிலைய அலுவலக வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான சர்ச்சையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்குமாறு கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். 'வாக்குத் திருட்டு' எனக் குற்றம்சாட்டி முழக்கமிட்டவர்களை நிதி ஆயோக் அலுவலகம் அருகே போலீஸார் தடுத்தனர். பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி தேசியக் கொடியுடன் தடுப்பின் மீது ஏறினார்.
முன்னேற முடியாத நிலையில், ராகுல், பிரியங்கா, தீபேந்தர் ஹூடா ஆகியோர் நண்பகலில் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்துக்குள் சென்று வெளியேற மறுத்தனர். மூன்று தேர்தல் ஆணையர்களையும் சந்திப்பதே நோக்கம் என்று ராகுல் கூறினார். போராட்டத்தின் இறுதியில், ராகுல், பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ'பிரையன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 50 எம்.பி.க்கள் உட்பட சுமார் 250 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், அகில இந்திய வானொலி நிலைய அலுவலக வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக, அதன் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.