இந்தியா

சீன உளவாளிகளிடம் ரகசியம் பகிர்வு: ராணுவ அதிகாரி மனைவி மீது வழக்கு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு முக்கியத் தகவல்களை அளித்ததாக, மூத்த ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி மீது ஜம்மு-காஷ்மீர் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த அந்தப் பெண், தற்போது ஜம்முவில் காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கிறார்.

முதற்கட்ட விசாரணைப்படி, சீன உளவாளிகள் அவரைத் தொடர்புகொண்டு, வியூகம் மற்றும் செயல்பாட்டு ரீதியாக முக்கியமான தலைப்புகளில் கட்டுரைகளை எழுத வைத்துள்ளனர்.

முதலில் சுற்றுச்சூழல், புவிசார் அரசியல் விவகாரங்களில் எழுத வைத்து, படிப்படியாக பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கு மாற்றியுள்ளனர்.

அவர் அறிவுசார் வலையில் அறியாமலேயே சிக்கியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

நம்பகமான வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர் கண்காணிப்புக்கு உள்ளானதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநிலப் பாதுகாப்புடன் தொடர்புடைய ஆவணங்கள், புகைப்படங்கள், மின்னணுத் தரவுகளை ரகசியமாகச் சேகரித்து அனுப்பியதாக அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இவை ரகசியக் குறியீட்டுப் பாதுகாப்பு கொண்ட வழிகள் மூலம் பகிரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை நடைபெற்று வருவதால், ஆவணங்களின் தன்மை, வெளிநாட்டுத் தொடர்புகளின் அடையாளம், பகிரப்பட்ட தகவலின் அளவு ஆகியவை வெளியிடப்படவில்லை.

வெளிநாட்டு முகவர்களுடன் அவருக்குத் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதைப் புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT