புதுடெல்லி: குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரம் போன்ற துறைகள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முக்கிய வழிகளாகச் செயல்படுகின்றன. பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது என்பது ஒரு திட்டமட்டுமல்ல. இந்த பட்ஜெட்டின் நோக்கமும் இந்த அரசாங்கத்தின் தீர்மானமும் இதுதான்.
நோய்கள் வராமல் தடுப்பதையும், முழுமையான சுகாதாரத்தையும் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. சமீப ஆண்டுகளில் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது.
நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதார சேவைகளின் அணுகல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய முறைகளான யோகாவும், ஆயுர்வேதமும் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன.
குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சுகாதாரத்துறையில் திறன் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த புதிய பயிற்சி மாதிரிகளை பரிந்துரைக்குமாறு சுகாதாரத்துறை நிபுணர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
சுகாதாரத்துறையில் டிஜிட்டல் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொலைதூரப் பகுதிகளில் மருத்துவ சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் தொலை மருத்துவத்தின் பங்கு அதிகரித்து வருகிறது. இதன் நன்மைகளை விரிவுபடுத்த அதிக விழிப்புணர்வும் எளிதான அணுகலும் தேவை.
நிஜ உலக பொருளாதாரத்துடன் நமது கல்வி முறையை இணைக்கும் செயல்முறையை நாம் மேலும் துரிதப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன், டிஜிட்டல் பொருளாதாரம், வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி போன்ற பாடங்களில் நமது கவனத்தை அதிகரிக்க வேண்டும்.
புதுமை சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா சீராக நகர்ந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களை தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றல் மையங்களாக மாற்ற வேண்டும்.
ஆராய்ச்சி மற்றம் புதுமைகளுக்கு அதிக ஆதரவு அளிக்கப்பட வேண்டும். புதிய யோசனைகளைப் பரிசோதிக்கவும், அவற்றில் பணியாற்றவும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு முழு வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஆராய்ச்சி சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
வளர்ந்து வரும் துறைகளில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது முக்கியம். எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு நாம் தயாராகி வரும் நிலையில், வாய்ப்புகள் இல்லாததால் எந்த மகளும் பின்தங்கிவிடக்கூடாது.
கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டு, தேசிய வளர்ச்சியின் ஒரு முக்கிய நீரோட்டமாகக் கருதப்படுகிறது. கேலோ இந்தியா போன்ற முயற்சிகள் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு புதிய சக்தியை அளித்துள்ளன. தற்போது நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பை அதிக அளவில் அளிப்பதில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கு உள்ளது. புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது, நகர பிராண்டிங்கை மேம்படுத்துவது ஆகியவை உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க உதவும்.
பயிற்சி பெற்ற வழிகாட்டிகள், விருந்தோம்பல் திறன்கள், டிஜிட்டல் இணைப்பு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது சுற்றுலாத்துறையின் தூண்களாக மாறி வருகின்றன. தேசிய வளர்ச்சியை விரைவுபடுத்த அரசு நிறுவனங்கள், தொழில் மற்றும் கல்வித்துறைக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம். இத்தகைய முயற்சிகளால் வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளம் மேலும் வலுப்படுத்தப்படும்’’ என தெரிவித்தார்.