புதுடெல்லி: அமெரிக்காவுக்கு எதிராக அல் காய்தா தீவிரவாத அமைப்பு நடத்திய 9/11 போன்ற ஒரு தாக்குதலை விமானி ஸ்மித் மச்சார் தடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், “துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் பயணிகள் விமானத்தில் நேற்று நடந்த சம்பவம், அதில் இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் வெளிப்படுத்திய பொறுமை, விவேகம், துணிச்சல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
9/11 போன்ற ஒரு தாக்குதலில் இருந்து விமானி ஸ்மித் மச்சார், தங்களை காப்பாற்றியதாக இஸ்ரேல் பிரதமர் கூறி இருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள வைத்திருக்கிறது.
இன்று நான் அவரது தந்தை பூபேந்திர பாய், தாய் கீதா பெஹன், மனைவி சோனல் ஆகியோருடன் உரையாடினேன். இன்று உலகம் முழுவதும் அவரைப் பற்றி பெருமை கொள்கிறது.
இந்தியாவின் பெருமையை உயர்த்திய சகோதரர் ஸ்மித்தை பாராட்டுமாறும், அவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் நான் எனது சக குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று யுபிஎஸ்சி-யின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் நாள் மட்டுமல்ல, அதன் பாரம்பரியத்தைக் கொண்டாடும் நாளும்கூட. இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்டிருக்கும் லட்சியத்தைக் கொண்டாடும் நிகழ்வாகும்.
இந்த 100 ஆண்டுகாலப் பயணத்தில் தலைமுறைகள் மாறின, அரசுகள் மாறின, தொழில்நுட்பம் மாறியது, பாடத்திட்டங்கள் மாறின. ஆனால், யுபிஎஸ்சி மீதான நம்பிக்கை இன்றும் என்றும் மாறாமல் உறுதியாக உள்ளது.
இன்று, யுபிஎஸ்சி மூலம் தேர்வாகக் கூடியவர்கள் வளர்ந்த இந்தியா எனும் இலக்கை அடைவதில் பெரும் பங்காற்றுவார்கள். இதை கருத்தில் கொண்டு, தேசமே முதலில், குடிமக்களே முதலில் என்ற இரண்டு கொள்கைகளை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசுப் பதவியின் மீதான ஈர்ப்பால் அல்லாமல், மக்கள் சேவை மீதான ஆர்வத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்களை நாம் பொதுச் சேவைக்கு (Public Services) கொண்டு வர வேண்டும். எனவே, பணி நியமனத் தேர்வானது ஒரு தேர்வர் எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார் என்பதை மட்டும் சோதிப்பதாக இருக்கக்கூடாது. மாறாக, அந்த இளைஞர் ஏன் குடிமைப் பணிகளில் இணைய விரும்புகிறார் என்பதையும் அது ஆராய வேண்டும்.
அரசு மட்டுமே நம்மைப் பராமரிக்கும் பெற்றோர் என்று கருதப்பட்ட ஒரு காலத்தை நாம் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். அரசே முழு அதிகாரம் கொண்ட அமைப்பு என்று கருதப்பட்ட காலம் அது.
ஆனால், குடிமக்களே தெய்வம் என்ற தாரக மந்திரத்தைக் கொண்ட ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதாவது குடிமகன் நமக்கு தெய்வத்துக்கு இணையானவர். குடிமக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான முன்னுரிமை.
ஏழைகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இரக்க உணர்வு கொண்ட, சிக்கல்களைத் தீர்ப்பதில் புதுமையான அணுகுமுறையைக் கையாளக்கூடிய, நாட்டின் தேவைகளை உணர்ந்த வல்லுநர்கள் நமக்குத் தேவை. சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட சட்டம் உண்மையில் நல்லதா என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய வல்லுநர் தேவை” என தெரிவித்தார்.