இந்தியா

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிக்களின் பதவிகளை ரத்து செய்ய குடியரசு தலைவரிடம் பகவந்த் மான் முறையீடு

மோகன் கணபதி

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முறையிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் 10 எம்பிக்களில் 7 பேர் ராகவ் சத்தா தலைமையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சி அதன் தொடக்க கால கொள்கைகளில் இருந்து விலகி, தவறான பாதையில் பயணிப்பதாகவும் எனவே தாங்கள் அதில் இருந்து விலகுவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, பகவந்த் மான் இன்று சந்தித்தார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “பஞ்சாபில் பாஜகவுக்கு இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், தற்போது பஞ்சாபில் இருந்து பல மாநிலங்களவை உறுப்பினர்களை அக்கட்சி பெற்றது எப்படி? ஆம் ஆத்மி கட்சி மூலம் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வானவர்கள், வேறொரு கட்சியில் இணைந்து உறுப்பினர்களாக தொடர்வது அரசியலமைப்புக்கு விரோதமானது.

அவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி மீது அதிருப்தி இருந்தால் முதலில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிறகு அவர்கள் பாஜகவில் இணைந்திருக்க வேண்டும். மக்களின் ஆணையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். ஏழு பேர் தங்களை ஒரு குழுவாக அறிவித்துக்கொண்டு மற்றொரு கட்சியில் எளிதாக இணைய முடியாது.

பஞ்சாபில் ஜனநாயகம் கேலி செய்யப்படுகிறது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை. குடியரசுத் தலைவரிடம் நாங்கள் எங்கள் குரலை வலுவாக எழுப்பினோம். அரசியலமைப்புக்கு முரணான வழிகளில் பிற கட்சிகளை பாஜக பிளவுபடுத்துகிறது. அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளை அது தவறாகப் பயன்படுத்துகிறது. இது நமது ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

ஆபரேஷன் தாமரையின் தந்திரங்கள் பஞ்சாபில் ஒருபோதும் வெற்றி பெறாது. பஞ்சாபியர்கள் ஒருபோதும் துரோகத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மக்களின் ஆணையையும் அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்க எங்கள் கடைசி மூச்சு உள்ளவரை நாங்கள் போராடுவோம்” என தெரிவித்தார்.

இதனிடையே, ராகவ் சத்தா தலைமையில் எம்பிக்கள் 4 பேர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுடன் இணைவது என்ற முடிவை எடுத்த பிறகு, அரசியலமைப்பு அளிக்கும் உரிமையை நாங்கள் பயன்படுத்திய பிறகு நாங்கள் குறிவைக்கப்படுகிறோம்.

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில அரசு, எங்களுக்கு எதிராக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. இதை நாங்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம்.

ஒரு காலத்தில் பழிவாங்கப்படுவதாகக் கூக்குரலிட்ட ஆம் ஆத்மி கட்சி தற்போது, எங்களை பழிவாங்கத் துடிக்கிறது. அரசியலமைப்பு உரிமைகளும் ஜனநாயக தேர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறிய வார்த்தைகளால் நாங்கள் வலிமை பெறுகிறோம்.

ஆம் ஆத்மி கட்சி இன்று ஓர் அரசியல் கட்சியைப் போல் அல்லாமல், வெறிபிடித்த முன்னாள் காதலனைப் போல நடந்து கொள்கிறது. பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து மீள முடியாமல் அக்கட்சி இருக்கிறது” என தெரிவித்தார். இரு தரப்பும் மாறி மாறி குடியரசுத் தலைவரைச் சந்தித்த சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT