நந்திகிராம் தொகுதியில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

 
இந்தியா

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்களில் பாஜக முன்னிலை

மோகன் கணபதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாமின் ஒரு மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாமின் நாகோன் மக்களவை தொகுதிக்கும் கடந்த 6-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தட்டாஞ்சாவடியில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஷோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி, ரெஜிநகரில் பாஜக வேட்பாளர் ஷங்கராவ் சர்கார் 28 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜியின் மமதா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆம் ஜனதா உன்னயான் கட்சியின் குலாம் நபி ஆசாத் சுமார் 8,000 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நந்திகிராமில் பாஜக வேட்பாளர் ஹசி ராணி ரத் 43 ஆயிரம் வாக்களுடன் முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 11 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமின் நகோன் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா 1 லட்சத்து 94 ஆயிரம் வாக்களுடன் முன்னிலை வகித்து வருகிறார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முகம்மது பத்ருதின் அஜ்மால் 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் சிபாமணி போரா 32 ஆயிரம் வாக்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

SCROLL FOR NEXT