மக்களவையில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ்
புதுடெல்லி: “மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்கியதன் மூலம், பிரதமரை காப்பாற்றிவிட்டீர்கள்” என்று நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் மத்திய அரசை அகிலேஷ் யாதவ் சாடினார்.
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடும் அமளிக்கு நடுவே பொதுத் தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டதால், மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் சமரச முயற்சியை அடுத்து, வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “தர்மேந்திர பிரதான் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அவைக்கு வெளியிலேயே அவர் வரவேற்கப்பட்டார். உறுப்பினர்கள் எவ்வளவு பெரிய நிம்மதியை உணர்ந்திருப்பார்கள் என்பதையும், அவர்கள் எத்தகைய பெரிய நெருக்கடியில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்பதையும் கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு பிரதானை நீக்கியதன் மூலம் பிரதமரை காப்பாற்றி விட்டீர்கள். பிரதமரை காப்பாற்றியதில் ஆளும் கட்சி நிம்மதி அடைந்துள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய இளைஞர்களின் உறுதி, மன வலிமை ஆகியவை பாராட்டுக்குரியவை. அரசு தன்னை வெல்ல முடியாது என்று நினைத்தது. ஆனால், உலகம் பணியும்; பணிய வைப்பவர் தேவை என்பதை இளைஞர்கள் நிரூபித்துவிட்டனர். அரசு பணிய நேர்ந்தது. அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தது.
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், கோயில் காணிக்கை திருட்டை தடுக்கத் தவறியவர்களால் எப்படி தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க முடியும்?
யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? சட்டம் பயனுள்ளதாக இருந்திருந்தால், பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எப்படி 20 தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்திருக்கும்?” என கேள்வி எழுப்பினார்.
அகிலேஷ் யாதவுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, “மாணவர் பேராட்டத்துக்கு அரசு செவி சாய்த்து நாடாளுமன்றத்தில் மசோதாவை கொண்டு வருவது சிறந்ததா அல்லது போராட்டத்தை ஒடுக்க நாடு தழுவிய அவசரநிலையை அமல்படுத்துவது சிறந்ததா?” என பதில் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்துப் பேசிய அகிலேஷ் யாதவ், “நான் அவசரநிலை காலத்தை நேரில் பார்த்தது இல்லை. ஆனால், அப்போது நடந்த நிகழ்வுகளின் எதிரொலியை இங்கே, தலைநகரிலேயே நாங்கள் பார்த்தோம்.
பிரச்சினை சட்டத்தில் இல்லை. உங்கள் நோக்கங்கள் நேர்மையானவை அல்ல. உங்கள் நோக்கங்கள் நேர்மையானவையாக மாறினால், தேர்வு நடைமுறையும் தூய்மையானதாகிவிடும்” என தெரிவித்தார்.