ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், நேற்று முன்தினம் மாலை சம்பாலால் என்ற தொழிலதிபர் ரூ.20 மதிப்பிலான கச்சோரி சாப்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரை நிறுத்தினார். அப்போது, ரூ.20 லட்சம் பணம் வைத்திருந்த பையை ஸ்கூட்டரின் முன்புறத்தில் வைத்துவிட்டு அவர் கச்சோரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இருவர், பணம் இருந்த பையைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சம்பாலால் தனது ஸ்கூட்டரில் அமர்ந்து கச்சோரி சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது.
அப்போது மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இருவர் அவருக்கு அருகில் நிற்கின்றனர். பின்னால் அமர்ந்திருந்த நபர், பணம் வைத்திருந்த பையை விரைவாகப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பாலால், கையில் கச்சோரியை வைத்துக்கொண்டே திருடர்களைப் பிடிக்க ஓடினார். ஆனால், அவரால் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.
தலைக்கவசம் அணிந்திருந்த இருவரையும் அடையாளம் காண்பதற்காக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பாலால் அளித்த புகாரின் அடிப்படையில், நஹர்கர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.