இந்தியா

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இந்நிலையில், சாகேத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதுகுறித்து டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர். விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலானதாக இருப்பதால் மீட்புப் பணியில் சவால் நீடித்து வருகிறது.

எனினும், உள்ளூர் பொதுமக்கள் தங்களது மொபைல் போன் டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி, மீட்புக் குழுவினருடன் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இடிந்து விழுந்த அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு தனியார் பயிற்சி மையம் இயங்கி வந்ததும், மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் மாணவர்கள் பலர் அங்கு இருந்ததால், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT