புதுடெல்லி: டெல்லியில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று உள்ளது. இதன்படி செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அனைத்து தலைவர்களும் பங்கேற்கின்றனர். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்பது குறித்து அந்த நாட்டு அரசு மவுனம் காத்து வந்தது. அவர் மாநாட்டில் பங்கேற்பார் என்று சீன வெளியுறவுத் துறை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த 2024-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.
கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ம் தேதிகளில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் எஸ்சிஓ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இரு தலைவர்களும் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
இந்த சூழலில் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க 400 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வருகிறார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு வருவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன அதிபர் டெல்லி தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலிலும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மவுரியா ஓட்டலிலும் தங்குகின்றனர். இதையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.