புதுடெல்லி: எரிபொருள், உணவு தானியம், உரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் பிரிக்ஸில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்று உள்ளது.
இதன்படி பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மாரோ வியாரா, இந்தோனேசியா வெளியுறவு அமைச்சர் சுகினோ, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் ரொனால்டு லாமோலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்காரணமாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக சீன தூதர் சூ பெய்ஹாங் மாநாட்டில் பங்கேற்று உள்ளார்.
பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது: உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக வளரும் நாடுகள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். உலகம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு நிலைநாட்டப்பட வேண்டும். சர்வதேச சட்ட விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் பொது கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி, செங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகள் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இதில் மிகவும் உறுதியாக உள்ளோம். போர்கள் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடுகளின் நிதிச் சுமை அதிகரித்திருக்கிறது. சுகாதார பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகின்றன. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும்.
பருவநிலை மாறுபாட்டால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இந்த பிரச்சினை குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் தொழில்நுட்பங்கள் கிடைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.