புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 3 – 5) பிரிக்ஸ் அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு குழுவின் இரண்டாவது தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 11 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து ஒடிசா பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி மேலும் கூறுகையில், “பேரிடர் ஆயத்தநிலை, திறம்மிக்க புயல் மேலாண்மை மற்றும் முன்னறிவிப்பு அமைப்புகள் ஆகியவற்றில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சாதனைகளை ஒடிசா கொண்டுள்ளது. எனவே இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான மாநிலமாக ஒடிசா தேர்ந்தெடுக்கப்பட்டது.
புரியில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். ஜூன் 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி பங்கேற்க உள்ளார்” என்றார்.
பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் முதலாவது தொழில்நுட்பக் கூட்டம் கடந்த ஏப்ரல் 29-30 தேதிகளில் இணைய வழியில் நடைபெற்றது. பேரிடர் மேலாண்மையில் பொதுவான செயல்திட்டத்தை மேம்படுத்துவதற்கான இந்தக் கூட்டத்துக்கு இந்தியா தலைமை வகித்தது. இந்நிலையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்கும் வகையில் இரண்டாவது கூட்டம் புரியில் நடைபெறுகிறது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். பேரிடர் அபாயக் குறைப்பு நிதி, பேரிடருக்கு பிறகு மீண்டு வருவதற்கான உள்கட்டமைப்பு, முன்கூட்டியே கணித்துச் செயல்படுதல், பேரிடர் மீள்திறன் உத்திகளில் பாரம்பரிய அறிவை ஒருங்கிணைத்தல் ஆகியவை தொடர்பாக ஆலோசனைகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.