மும்பை: காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலியின் தந்தை உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியை சேர்ந்த 20 வயதான சாக்சம் டானை அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சல்(21) 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆஞ்சலின் தந்தை, சகோதரர்கள் சாக்சமை கொலை செய்தனர். கடந்த மாதம் 27-ம் தேதி சாக்சமை கடத்திச் சென்று தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கி ஆஞ்சலின் குடும்பத்தார் கொடூரமாகக் கொலை செய்தனர்.
இந்நிலையில் ஆஞ்சல், காதலன் சாக்சம் வீட்டுக்குச் சென்று காதலன் சடலத்துடன் திருமணம் செய்தார். மேலும் தன்னுடைய காதலன் வீட்டிலேயே வாழ்வேன் என்றும் அவர் சபதம் செய்துள்ளார்.
இந்நிலையில் ஆஞ்சலின் தந்தை கஜனன் மமித்வார், அண்ணன் ஹிமேஷ் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஆஞ்சல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது அண்ணன்களும், எனது தந்தையும் எங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினர். ஆனால் கடைசியில் எங்களது குடும்பமே எனக்குத் துரோகம் இழைத்துவிட்டது.
எங்கள் பகுதியைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் தீரஜ் கோமல்வார், மஹீத் அசர்வார் ஆகியோர் எனது அண்ணன்களை தூண்டி விட்டு கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். நீதியைத் தர வேண்டிய போலீஸ்காரர்களே இப்படி நடந்துகொண்டால் நான் என்ன செய்ய முடியும். சாதி வெறியால்தான் இந்த கொலை நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.