கொச்சி: கேரளாவில் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையான நீதிபதி மீது, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம், கொச்சியில் கடந்த அக். 25-ம் தேதி, நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற கார், சேரனல்லூர் அருகே ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, 17 சிறுவன் மற்றும் அவரது தந்தையான நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் காவல் துறையில் புதிய புகார் ஒன்றை அளித்தனர். அதில், “விபத்து நடந்த இடத்தில் நீதிபதி நீண்ட நேரம் இருந்து, வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழிக்க முயன்றார். மேலும், விபத்துக்குப் பிறகு நீதிபதி சேரனல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்று,
நாங்கள் எடுத்திருந்த தனது மகனின் புகைப்படத்தை அழிக்குமாறு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நீதிபதி வற்புறுத்தி உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக நீதிபதி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.