புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளான இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், மக்களவையில் நான்கு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளான இன்று (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, போராட்டங்களுக்கு மத்தியிலும் மக்களவையில் நான்கு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன: தீர்ப்பாயச் சீர்திருத்த மசோதா (2026), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா (2026), கேரள மாநிலப் பெயர் மாற்ற மசோதா (2026) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக திருத்த மசோதா (2026) ஆகியவை இதில் அடங்கும்.
இந்தச் சூழலில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் நன்கொடைகள் திருட்டு விவகாரம் குறித்து அரசிடமிருந்து பதில் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது. இதனால் மக்களவையில் தொடர் அமளி நிலவியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் சில பணிகள் மேற்கொள்ளபட்டாலும், அங்கேயும் அமளி ஏற்பட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இன்று அவையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வியூகத்தை வகுப்பதற்காக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் மக்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து இடையூறுகளைச் சந்தித்து வருகின்றன. அவையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு மசோதாக்களில் ஆறு மசோதாக்கள் விவாதம் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளன.